22 April 2022
இரவு 7 - 9
தமிழ் இலக்கியங்கள் ஒரு மனிதன் சிறப்பான வாழ்க்கை வாழ ஏதுவான விழுமியங்களையும், ஒழுக்க நெறிகளையும் எடுத்துக் கூறுகிறது. "கடையெழு வள்ளல்கள்” பற்றிய இந்நிகழ்ச்சி, சங்கக்கால விழுமியங்களைப் புத்தாக்கத்துடன் விவரித்து, பாடல்கள், நடனங்கள் வாயிலாக ஒழுக்க நெறிகளைப் புகட்டுகிறது. நாம் நவீனமயமாகிவரும் உலகில் வாழ்கிறோம்.
இளம் வயதிலேயே சான்றுகளோடு கூடிய இக்கருத்துகளைப் பள்ளி மாணாக்கர்கள் அறிதல் அவசியம். ஆக, கலாமஞ்சரி ‘கடையெழு வள்ளல்களின்’ கதையை பாட்டு மற்றும் நடனம் வழியாக எளிய தமிழில் மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கிறது. பல இனக்கலாச்சாரத்தில் வாழும் சிங்கப்பூர் மாணவர்கள், பொருளாதார முன்னேற்றத்தோடு, தனி மனித ஒழுக்கத்தையும் இரு கண்களாகக் கருத வேண்டியது இன்றியமையாத ஒன்று.
ஆகையால் ‘கடையெழு வள்ளல்கள்’ பற்றி கலாமஞ்சரி சென்ற வருடம் 4 பள்ளிகளில் வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் பட்டறை ஒன்றை நடத்தியது. அதில் சில மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் அவர்கள் கற்றுக் கொண்டதைப் பற்றி கருத்துரைப்பர். சில மாணவர்கள் பாட்டு நிகழ்ச்சியில் தங்கள் திறமையை வெளிக்காட்டுவர்.
ஆங்கிலத்திலும் கடையெழு வள்ளல்களின் அரிய செயல்களும் அவற்றின் மூலம் ஒருவர் பின்பற்ற ஏதுவான விழுமியங்களும் எடுத்துச் சொல்லப்படும். ஆக, பாட்டு மற்றும் நடனம் வழியாக தமிழ் இலக்கியம் ஒன்றில் சொல்லப்பட்டிருக்கும் அரிய பண்புகளை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதே ‘கடையெழு வள்ளல்கள்’ நிகழ்ச்சியின் புத்தாக்கம்.