வளர்தமிழ் இயக்கத்தைப் பற்றி...
பெயர் விளக்கம்
செம்மொழிகளுள் ஒன்றாகிய தமிழ்மொழி, எக்காலத்திற்கும் உகந்த மொழியாக வளர்ந்துள்ளது. இதே தன்மையில், எதிர்காலத்திலும் தொடர்ந்து வளர்ந்து, சிறப்பும்
செழிப்பும் நிறைந்த மொழியாகத் திகழ வேண்டும் என்பதையும் சிங்கப்பூரில்
தமிழ்மொழியின் இந்த நீடித்த வளர்ச்சியைக் குறிக்கும் நினைவூட்டலாகவும் இப்பெயர்
இவ்வியக்கத்திற்குச் சூட்டப்பட்டுள்ளது.
நோக்கம்
சிங்கப்பூரில்
தமிழ்மொழியை வாழும் மொழியாகவும் பயன்பாட்டு மொழியாகவும் நிலைபெறச் செய்வதோடு, அனைத்து வயதினரையும் தமிழால் ஒன்றிணைத்து,
சிங்கப்பூரில் தமிழ்மொழியை ஓங்கச் செய்வதே வளர்தமிழ் இயக்கத்தின் தலையாய நோக்கமாகும்.
அரசாங்க ஆதரவு
வளர்தமிழ் இயக்கம்,
சிங்கப்பூரின் தகவல் கலை அமைச்சின் (MICA) மேற்பார்வையில் 2001-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. துணைப் பிரதமர் பேராசிரியர் ச.ஜெயகுமாரின்
தலைமையில், இந்திய அமைச்சர்கள் திரு.
தர்மன் சண்முகரத்னம், டாக்டர் பாலாஜி சதாசிவன், திரு எஸ். ஈஸ்வரன், மற்றும்
திரு கா. சண்முகம் ஆகியோர் ஆலோசகர்களாகப் பணியாற்றினர். அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் அவர்களை ஆலோசகராகக்கொண்டு, வளர்தமிழ் இயக்கம் தற்சமயம் சிறப்புடன் இயங்கி வருகின்றது.
செயல்முறை
சிங்கப்பூரில் தமிழின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக
விளங்கி, சிறப்பாகச் செயல்படும் தமிழ் அமைப்புகளையும், தனிநபர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் ஒன்று திரட்டி, ஒரு மாதம் முழுவதும் தமிழை மையப்படுத்தி அமையப்பெற்ற தமிழ்மொழி
விழாவினை நடத்துவது ஒரு முக்கிய
செயல்முறையாகும்.
தமிழ்மொழி விழாவைத் தவிர்த்து,
ஆண்டு முழுவதும் மொழி வளர்ச்சிக்கு வலுவூட்டும் நடவடிக்கைகளைத் தமிழ்ச்
சமூகத்துடன் ஒன்றிணைந்து படைப்பதும் மற்றுமொரு செயல்முறையாகும்.