வளர்தமிழ் இயக்கம் அதன் 20வது ஆண்டு நினைவு மலரை “நமது பயணம் (2000 – 2020): தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்,” என்ற தலைப்பில் வழங்குகிறது.
இந்த வெளியீடு வளர்தமிழ் இயக்கத்தின் உருவாக்கம், முன்னோடிகளின் தொலைநோக்குப் பார்வை, எதிர்கால இலக்குகள், மேற்கொண்ட சில முக்கிய முயற்சிகள், மைல்கற்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நினைவு மலர் சிங்கப்பூரில் தமிழ் மொழி கற்றல், தமிழ் செய்தித்தாள்களின் வரலாறு பற்றிய கண்ணோட்டத்தையும், சமூகத்தினரிடையே தமிழ் மொழியை ஊக்குவிப்பதை ஆதரித்த பல பங்காளித்துவ அமைப்புகளையும் தனிநபர்களையும் பற்றிய தகவல்களையும் கொண்டுள்ளது.
"நமது பயணம்" பின்வரும் நான்கு முக்கிய பகுதிகளை மையமாகக் கொண்டு விவரிக்கப்பட்டுள்ளது:
• சுதந்திரத்திற்கு முந்தைய, பிந்தைய சிங்கப்பூரில் பல்வேறு முக்கிய நபர்கள், அமைப்புகள், சங்கங்கள், வெளியீடுகள் போன்றவை மேற்கொண்ட முன்னோடி முயற்சிகள்.
• சிங்கப்பூரின் தமிழ்ச் சமுதாயத்தினரிடையே தமிழ் மொழிப் பற்றையும் அதிகமான தமிழ்ப் பேச்சுப் புழக்கத்தையும் கற்றலையும் விழிப்புணர்வையும் மேம்படுத்திடப் பற்பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வரும் வளர்தமிழ் இயக்கம், தமிழ் / இந்திய அமைப்புகள், கழகங்கள் போன்றவற்றுக்கிடையே செதுக்கப்பட்டு வந்துள்ள பங்காளித்துவங்கள்.
• வளர்தமிழ் இயக்கம் தன் பங்காளிகளுடன் இணைந்து பல ஆண்டுகளாக, குறிப்பாக வருடாந்திர தமிழ் மொழி மாத விழாக் காலகட்டத்தில் ஏற்பாடு செய்து வரும் நிகழ்ச்சிகள்.
• இனி வருங்காலத்திலும், குறிப்பாக நமது இளையர்களுக்கேற்ப, அதிகமான தொழில்நுட்பத் தமிழ்ப் புழக்கத்தை முடுக்கிவிடுவதன் வழியாகவும், பல்வேறு வகையான சமூக ஊடகங்கள் வழியாகவும் தமிழ் மொழி வளர்ச்சிக்கான இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து பீடுநடை போடுவதை உறுதிசெய்யக் கூடிய முன்னோக்கிய பாதை.
இந்த நினைவு மலரை போக்குவரத்து அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரும் வளர்தமிழ் இயக்கத்தின் (2000-2016) ஆலோசகருமான எஸ் ஈஸ்வரன் 5 செப்டம்பர் 2021 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியிட்டார்.
இந்த இணைப்பை பார்க்கவும்: "நமது பயணம் (2000 - 2020): தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்" - தமிழ் பதிப்பு
இந்த இணைப்பை பார்க்கவும்: "நமது பயணம் (2000 - 2020): தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்" - ஆங்கிலம் பதிப்பு