பார்வை 2017: செங்குழல் சீவிய பத்தினித் தீ

2017-TLF---Paarvai

02 April 2017
காலை 10.30 - மதியம் 1.30


நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத்தினரால் இந்த நிகழ்ச்சி முதல்முறையாக, தமிழ்மொழி விழாவில் படைக்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி மூன்று அங்கங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இசைக் காணொளிப் போட்டி முதல் அங்கமாக நடைபெறும். மகாபாரதக் காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தமிழ்மொழி நடையை இக்கால இளையர்களுக்கு அறிமுகப்படுத்துவதும், அவர்களை மொழியின்பால் ஈர்ப்பதும் இதன் நோக்கங்களாகும். இந்தப் போட்டி மேற்கல்விக்கூடங்களில் (புகுமுக வகுப்பு மற்றும் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி)  பயிலும் மாணவர்களுக்காக நடத்தப்படும். போட்டியாளர்களுக்கு 1.5நிமிடங்கள் கொண்ட பின்னணி இசை வழங்கப்படும்.

மகாபாரதக் கதாமாந்தர்களில் ஐவர் குறித்த குறிப்புகளும் வழங்கப்படும். இவற்றை வைத்துக்கொண்டு, போட்டியாளர்கள் ஒரு காட்சியை அமைக்கவேண்டும். அந்தக் காட்சி ஒரு நாடகப்பாணியிலோ அல்லது ஒரு நாட்டியப்பாணியிலோ இருக்கலாம்.  

இந்தப் படைப்பைப் போட்டியாளர்கள் காணொளியாகப் படம்பிடித்து, இறுதிவடிவமாகச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் போட்டியின் இறுதியில் அனைத்துக் காணொளிகளும் ஒளிபரப்பப்படும். தமிழில் புலமையும் ஆழமும் கொண்ட நடுவர் குழுவினர் சிறந்த படைப்புகளை அடையாளம் கண்டு, அவர்களை வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுப்பர்.

இரண்டாவது அங்கத்திற்கு, ‘கஹூட்’ என்ற மென்பொருளைப் பயன்படுத்தி, சில தலைப்புகளில் கேள்விகள் தயாரிக்கப்பட்டிருக்கும். வினாடி வினா பாணியில் அமையப்பெற்றிருக்கும் இந்த அங்கம் , பார்வையாளர்களுக்காக நடத்தப்படும். இதன்மூலம் ஓர் இனிய, போட்டி நிறைந்த உணர்வை அரங்கத்தில் ஏற்படுத்த ஏற்பாட்டாளர்கள் எண்ணம் கொண்டிருக்கின்றனர்.

இந்த அங்கத்திற்கான கேள்விகள் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். மூன்று விதமான கேள்விகள் தயாரிக்கப்படும். முதலாவது, மகாபாரதக்காப்பியம் சார்ந்த கேள்விகளாக அமையப்பெற்றிருக்கும். இரண்டாவது, போட்டி நெறியாளர்கள் கொடுக்கும் குறிப்புகளை வைத்துக்கொண்டு, கதாபாத்திரங்களைக் கண்டுபிடிக்கும் போட்டியாகும்.

இறுதியாக, மகாபாரதத்தைப் போட்டியாளர்கள் எந்தளவிற்கு ஆழமாக அறிந்துள்ளனர் என்பதைச் சோதிக்க, வினாடி-வினாபாணியில் கேள்விகள் தொடுக்கப்படும்.

இறுதி அங்கமாக, ‘வெவ்வேறு காலக்கட்டங்களில் மகாபாரதம் பற்றிய பார்வைகள்’ என்ற தலைப்பில் பல்கலைக்கழக மாணவர்கள் ஓர் அணியாகவும், அனுபவமிக்கத் தமிழ்ப்பேச்சாளார்கள் இன்னொரு அணியாகவும் களம் இறங்கி, கலந்துரையாடலில் ஈடுபடுவார்கள்.


Back To Top